ரீ-மேக் படங்களை விரும்பாதவர் அஜித். காலம் அவரையும் ரீ-மேக் ப்ரியராக்கியிருக்கிறது.

நேரடி தமிழ்ப்படங்கள் தோல்வியடையும் போதெல்லாம் வெற்றி பெற்ற பிறமொழி படங்களின் ரீ-மேக்கில் நடிப்பது விஜய்யின் வெற்றி சூட்சுமம். 'பிரெண்ட்ஸ்', 'பிரியமானவளே', 'கில்லி', 'போக்கிரி' இதற்கு உதாரணங்கள்.

சமீபமாக அஜித் நடித்த எந்த நேரடி தமிழ்ப்படமும் சரியாக போகவில்லை. ரீ-மேக் படமான 'கிரீடம்' பெயரையும், இன்னொரு ரீ-மேக் 'பில்லா' வசூலையும் பெற்றுத்தந்தது. இதனால், ரீ-மேக் என்றால் முன்புபோல் முகம் சுளிப்பதில்லை அஜித்.

ராஜூ சுந்தரம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏகனு'ம் ரீ-மேக் படம் என்பது, ராஜூசுந்தரமோ, அஜித்தோ வெளியிடாத ரகசியம். ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'மெய்ன் ஹூன்னா' ( Main Hoon Na) படமே 'ஏகனா'க தயாராகிறது.

ராணுவ அதிகாரியான ஷாருக்கின் தந்தை நசுருதீன் ஷாவுக்கு வேறொரு குடும்பம் இருக்கிறது, ஷா மரணமடையும்போது இதனை தெரிந்து கொள்ளும் ஷாருக் அந்த இன்னொரு குடும்பத்தை தேடி வருகிறார். தேடலில் தனக்கொரு தம்பி இருப்பதையும், அவன் கல்லூரியில் படிப்பதையும் தெரிந்து கொள்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் ராணுவ உயரதிகாரியின் மகளுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதன் காரணமாக தம்பி படிக்கும் அதே கல்லூரிக்குள் மாணவனாக நுழைகிறார் ஷாருக் அங்கு பேராசிரியராக இருக்கும் சுஷ்மிதா சென்னுடன் ஷாருக்கிற்கு காதலும் ஏற்படுகிறது.

'ஏகனி'ல் ஷாருக் வேடத்தில் அஜித்தும், தம்பி வேடத்தில் நவ்தீப்பும், பேராசிரியர் வேடத்தில் நயன்தாராவும் நடிக்கின்றனர். அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில் அஜித் நடிப்பதாக கூறப்படும் படமும் இந்தி 'ரேஸ்' படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

CINEMATHAN சினிமாதான் - Design by Abdul Munir For StudentZOnlineAlauddin 3 Column Template.